அன்னூர்,ஏப்.23: கோவை மாவட்டம், அன்னூர் அருகே குருக்கிலியாம்பாளையம் பகுதியில் ராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு எடுத்து பழைய பிளாஸ்டிக் சேகரித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து வந்து விற்க பழைய பிளாஸ்டிகை திறந்த வெளியில் இருப்பு வைத்துள்ளனர்.
இந்த பிளாஸ்டிக் குடோனில் நேற்று எதிர்பாராத விதமாக திடீரென தீ பற்றி கரும்புகை வெளியேறியது. பின்னர் தீ மளமளவென பரவ ஆரம்பித்து அந்த பகுதி முழுவதும் தீ பற்றி எரிந்து கரும்புகை சூழ்ந்தது. இது குறித்து அன்னூர் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சிடித்து தீயை அணைத்தனர். இதில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது.
