கோவைக்கு வேலைக்கு வந்த கட்டிட தொழிலாளி மீது பயங்கர தாக்குதல்

கோவை, ஏப். 17: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் புலிகேசி (45). இவரது மனைவி லதா (42). புலிகேசி பெயிண்டிங் மற்றும் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி சென்னையை சேர்ந்த அய்யனார் என்ற மேஸ்திரி, பெயிண்டிங் வேலைக்காக புலிகேசியை கோவைக்கு அழைத்துள்ளார்.

அவரும் கோவை வந்து ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் மேஸ்திரி, அய்யனார், மற்றும் அவரது நண்பர்கள் கலைவாணன், துரோமோ ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி நள்ளிரவு லதாவிற்கு போன் செய்த புலிகேசி, தன்னுடன் வேலை பார்க்கும், அய்யனார், கலைவாணன், துரோமோ ஆகியோர் தன்னைப் பயங்கரமாகத் தாக்குவதாகவும், தன்னைக் காப்பாற்றுமாறும் அலறி போனை துண்டித்துள்ளார்.

பதற்றமடைந்த லதா, மீண்டும் கணவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த லதா, கடந்த 14ம் தேதி கோவைக்கு வந்து கணவரைத் தேடினார். அப்போது, புலிகேசி பலத்த காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து லதா ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கலைவாணன், துரோமோ மற்றும் அய்யனார் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

 

 

Related Stories: