கோவை,ஏப்.20:மருதமலை கோயில் அடிவாரத்தில் கார் கடைக்குள் புகுந்து மூதாட்டி படுகாயம் அடைந்தார். விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை வடவள்ளி பொம்மனம்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தி (50). இவர் மருதமலை கோயில் அடிவாரத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாந்தியின் கடைக்குள் புகுந்தது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் ஓடி வந்து சாந்தியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில் விபத்தை ஏற்படுத்தியது நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த தன்யா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த விபத்தின் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
