மேட்டுப்பாளையம், ஏப்.19: மேட்டுப்பாளையம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக ஒ.கே.சின்னராஜ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு பாஜவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட காரமடை பகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரத்தில் ஈடுபட்டார். கட்சி தொண்டர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
அப்போது \\” தமிழகத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், அரசு வேலை கொடுத்தது 95 ஆயிரம் பேருக்கு தான். 3 லட்சம் பேருக்கு வேலை கொடுப்பதாக திமுக வாக்குறுதி அளித்தது. இதுபோன்று 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் வெறும் 70 வாக்குறுதிகள் தான் நிறைவேற்றி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தில் இருந்து வருபவர். ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களை புரிந்தவர்.அவர் ஆட்சிக்கு வருவது தான் சிறந்தது. நீர்பாசனத்தை மேம்படுத்த தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நல்லாட்சி மலர அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜூக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர். அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் \\” என தெரிவித்தார். கூட்டத்தில் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், அதிமுக பொறுப்பாளர் கே.ஆர்.அர்ஜூனன், மாவட்ட துணை செயலாளர் பி.டி.கந்தசாமி, மாவட்ட பொருளாளர் பொன்னுச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், மாவட்ட மகளிரணி செயலாளர் விமலா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் , பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் வி.பி.ஜெகநாதன்,தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் சக்திவேல், மாவட்ட பொதுச்செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
