ஈரோட்டில் முன்னாள் கவர்னரை கண்டித்து தடைமீறி ஆர்ப்பாட்டம் செய்த திவிகவினர் 11 பேர் விடுதலை

ஈரோடு, ஏப்.23: ஈரோட்டில் தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னரை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் திராவிடர் விடுதலை கழகத்தினர் 11 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு அருகே கடந்த 2023ம் ஆண்டு திராவிடர் விடுதலைக்கழக மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி தலைமையில் தமிழ்நாடு முன்னாள் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரத்தினசாமி, கணகுறிஞ்சி, கார்மேகம், பேரன்பு, இளங்கோவன் உட்பட 11 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் நடந்து வந்தது.

இந்நிலையில், மாஜிஸ்திரேட் ராஜ்குமார், வழக்கின் இறுதி விசாரணையை நேற்று முடித்து தீர்ப்பளித்தார். அதில், அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் 11 பேரின் குற்றத்தை நிரூபிக்க தவறியதால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் ஆஜரானார். விடுதலை பெற்ற அனைவரும் இனிப்பு கொடுத்து தங்களது மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டனர்.

 

Related Stories: