பெருந்துறை, ஏப்.19: பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் நேற்று மாவட்ட பேரூராட்சிகள் துறை சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகன பேரணி மற்றும் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 41 பேரூராட்சிகளில் இருந்து தலா ஒரு வாகனம் வீதம் இந்த விழிப்புணர்வு வாகன பேரணியில் பங்கேற்றது. வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வாகன பேரணியை கலெக்டர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலர் பிரியா, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் பாலு (எ) பாலசுப்ரமணியன் வரவேற்றார். வாகன பேரணி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் செயல் அலுவலர்கள் பாலாஜி, நந்தகுமார், செல்வகுமார், தேவநாதன், சதாசிவம், மகேந்திரன், பாலாஜி, தலைமை எழுத்தர் ஹரி ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
