ஈரோடு, ஏப்.23: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான புகார்களை பெற தொகுதி வாரியாக கட்டுப்பாட்டு அறை, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. மேலும், ‘சி விஜில்’ செயலி மூலமாகவும், 1950 என்ற கட்டணமில்லா எண் மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டது.
புகார்கள் மீது மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மார்ச் 15ம் தேதி முதல் கடந்த 21ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 2,773 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில், 2,762 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11 புகார்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
