3 நாள் தொடர் விடுமுறையையொட்டி டாஸ்மாக்கில் 20ம் தேதி ரூ.13 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு, ஏப்.23: ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 13 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று (23ம் தேதி) நடைபெற உள்ளது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், தனியார் பார்களுக்கு கடந்த 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் விடுமுறை தினத்திற்கு முந்தைய நாளான கடந்த 20ம் தேதி மாவட்டத்தில் உள்ள 183 டாஸ்மாக் கடைகளில் மட்டும் ரூ.13 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளது.

வழக்கமான நாட்களில் ரூ.6 கோடிக்கும், விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்களில் ரூ.8 கோடி வரைக்கும் மது வகைகள் விற்பனையாகும். ஆனால், கடந்த 20ம் தேதி மட்டும் தொடர் விடுமுறை காரணமாக ரூ.13 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் துறையினர் தெரிவித்தனர்.

 

 

Related Stories: