காத்திருப்பு போராட்டம் 650 பேர் கைது

நாமக்கல் கலெக்டர் ஆபிசில்

அங்கன்வாடி ஊழியர்கள்

நாமக்கல்,  பிப்.23: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 650 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல்  கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்  சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில  துணைத்தலைவர் ஜெயக்கொடி தலைமையில் 600க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள்  போராட்டத்தில் கலந்து கொண்டனர். நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் கைலாசம்  தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கன்வாடி  ஊழியர் மற்றும் உதவியாளர்களை, அரசு ஊழியர் ஆக்க வேண்டும்.

அகவிலையுடன்  கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும்.  பணி ஓய்வு பெறும்போது, பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ₹10 லட்சமும்,  உதவியாளர்களுக்கு ₹5 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி,  அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். சில பெண்கள்  தரையில் படுத்தும், கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முடியாதபடி, போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர். தொடர்ந்து அனுமதியின்றி  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும்  உதவியார்கள், 650 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  பின்னர் அனைவரையும் மாலையில் போலீசார் விடுதலை செய்தனர்.

Related Stories:

>