பெங்களூருவில் அதிகாரிகள் அதிரடி – சோதனையில் ரூ. 23.6 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

பெங்களூரு நகர காவல்துறையினர் சுமார் 23.63 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதோடு, 10 நபர்களை கைது செய்து உள்ளனர். கடந்த சில வாரங்களாக எலஹங்கா நியூ டவுன், டி.ஜே. ஹள்ளி, பனஸ்வாடி, கோரமங்களா, பொம்மனஹள்ளி மற்றும் புலிகேசிநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களில் 5.919 கிலோ MDMA (படிக வடிவம்), 1.151 கிலோ கொக்கைன், 21 கிலோ கஞ்சா மற்றும் 19 கிராம் எக்ஸ்டஸி மாத்திரைகள் ஆகியவை அடங்கும். மேலும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெங்களூரு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமீபத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அடிப்படை மதிப்பு சுமார் 11.81 கோடி ரூபாய் என்றாலும், அவற்றின் சந்தை மதிப்பு இதைவிட ஏறக்குறைய இருமடங்கு அதிகம்.

பல்வேறு ஆதாரங்களிடம் இருந்து பெறப்பட்ட நம்பகமான தகவல்களின் அடிப்படையில், எலஹங்கா நியூ டவுன், டி.ஜே. ஹள்ளி, கோரமங்களா, பொம்மனஹள்ளி மற்றும் புலிகேசிநகர் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்குள் MDMA, கொக்கைன், கஞ்சா மற்றும் எக்ஸ்டஸி மாத்திரைகள் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் 23.63 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் கண்டறியப்பட்டது என குறிப்பிடப்பட்டு உள்ளது. மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்த போதை பொருள் கட்டமைப்பு செயல்பட்டு வந்ததாகவும், மேலும் இது பல்வேறு மாநிலங்கள், நாடுகளுடன் தொடர்புடைய சங்கிலித்தொடர் போன்ற கட்டமைப்பு என்றும் கூறப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டினர் (இரு பெண்கள்), இரண்டு உள்ளூர்வாசிகள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து நபர்கள் அடங்குவர். முதற்​கட்ட விசா​ரணை​யில் கூரியர் மூலம் வெளிநாட்​டில் இருந்​தும் வெளி மாநிலங்​களில் இருந்​தும் போதை பொருட்களை வரவைத்து, பெங்​களூரு​வில் கல்​லூரி மாணவர்​கள் மத்தியில் விற்​பனை செய்​தது தெரிய​வந்துள்ளதாக பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது

Related Stories: