‘இந்தியா’ கூட்டணி புறக்கணித்ததால் மாநிலங்களவை துணை தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு: 7 ஆண்டாக காலியாக இருக்கும் மக்களவை துணைத்தலைவர் பதவி

புதுடெல்லி: ‘இந்தியா’ கூட்டணி புறக்கணித்ததால் மாநிலங்களவை துணை தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஹரிவன்ஷ் நாராயண் சிங் (69) மூன்றாவது முறையாக மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முன்னதாக, இவரது இரண்டாவது பதவிக்காலம் கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 10ம் தேதியன்று குடியரசுத் தலைவரால் இவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இவர் மீண்டும் வெற்றி பெற்றால், நியமன உறுப்பினர் ஒருவர் மாநிலங்களவை துணைத் தலைவராகப் பொறுப்பேற்பது இதுவே வரலாற்றில் முதல் முறையாகும். 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஆளும் கூட்டணிக்கு சுமார் 140 இடங்கள் உள்ள நிலையில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கு சுமார் 70 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெறுவது உறுதியான நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை.

மக்களவை துணைத் தலைவர் பதவி கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் முதல் சுமார் ஏழு ஆண்டுகளாக காலியாகவே இருந்து வருகிறது. வழக்கமாக எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்படும் இந்த பதவியை நிரப்பாமல், ஒன்றிய அரசு அரசியல் சாசன விதிகளை மீறி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் ஒரு நியமன உறுப்பினரை முன்னிறுத்துவது சபையின் பிரதிநிதித்துவத் தன்மையைச் சிதைக்கும் என்றும், தேர்தல் தேதி குறித்து தங்களை ஆலோசிக்கவில்லை என்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நடைபெறும் மாநிலங்களவை துணை தலைவர் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப் போவதாக இந்தியா கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ஹரிவன்ஷ் நாராயண் சிங் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே, ‘ஹரிவன்ஷ் நாராயண் சிங் தனது மூன்றாவது பதவிக்காலத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: