புனே: மகாராஷ்டிராவில் மாம்பழங்கள் மற்றும் மாம்பழம் சார்ந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலம் புனேவில் ரசாயனம் கலக்கப்பட்ட மாம்பழ கூழை அதிகாரிகள் கைப்பற்றி அழித்து உள்ளனர். மாம்பழ கூழ் உற்பத்தி ஆலைகளில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 3,800 கிலோ அளவிலான ரசாயனம் சேர்க்கப்பட்ட மாம்பழ கூழை அழித்தனர்.
மாவல் மற்றும் கேத் வட்டங்களில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பகுதிகளில் செயல்பட்ட சில மாம்பழ கூழ் உற்பத்தி நிலையங்கள் பாதுகாப்பற்ற செயற்கை நிறமூட்டிகள், சர்க்கரை மற்றும் அனுமதிக்கப்படாத பிற சேர்க்கைப் பொருட்களைப் பயன்படுத்தி போலி மற்றும் கலப்படம் செய்யப்பட்ட மாம்பழக் கூழை தயாரித்து வந்தன.
இந்த நிலையில் இது குறித்து கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் FDA அதிகாரிகள், குறிப்பிட்ட ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த தகவல் உண்மை என்பதை கண்டறிந்த அதிகாரிகள் விரைவில் கெட்டுப்போகக்கூடிய அல்லது உடலுக்கு தீமையை ஏற்படுத்த கூடிய கலப்படம் செய்யப்பட்ட மாம்பழ கூழ் சந்தைக்குள் நுழைவதை தடுக்க கைப்பற்றப்பட்ட மாம்பழ கூழை உடனடியாக சம்பவ இடத்திலேயே அழித்தனர்.
குறிப்பாக கேட் தாலுகாவில் இருந்த நிறுவனம் ஒன்று, மாவல் பகுதியில் இயங்கும் மாம்பழ கூழ் உற்பத்தி நிலையத்திடமிருந்தே கூழை நேரடியாகப் பெற்று வந்தது தெரியவந்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) அதிகாரிகள் மற்றொரு ஆய்வை மேற்கொண்டனர்; அந்த ஆய்வின்போது, ரூ.61,380 மதிப்புள்ள 558 கிலோ மாம்பழக் கூழை கூடுதலாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மூலம், இவ்விரு இடங்களிலிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட கலப்படம் செய்யப்பட்ட மாம்பழக் கூழின் மொத்த அளவு 3,800 கிலோவைத் தாண்டியது.இதனிடையே ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அல்லது அனுமதிக்கப்படாத ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்ட மாம்பழ கூழை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். ஏனெனில் இது செரிமானப் பிரச்சனைகள் முதல் நீண்டகால நோய்கள் வரை பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும். எனவே நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
2006-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ், செல்லுபடியாகும் உரிமம் ஏதுமின்றிச் செயல்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், இதற்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் FDA எச்சரித்துள்ளது. போலி மாம்பழங்கள், கலப்படம் செய்யப்பட்ட மாம்பழக் கூழ் மற்றும் இரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பழங்கள் தொடர்பான புகார்களை, FDA-வின் உதவி எண் வாயிலாகத் தெரிவிக்குமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
