டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பு இரவு 7 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ சட்டம் கடந்த 2023ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது 2026ம் ஆண்டுக்கு பிறகு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னரே அமலுக்கு வரும் என்ற நிபந்தனையுடன் இருந்தது. இந்த சூழலில், நேற்று இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், 2023ம் ஆண்டு சட்டத்தை அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டது. புதிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இந்த பழைய சட்டம் நடைமுறைக்கு வருவது தொழில்நுட்ப ரீதியாக அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக கடைபிடித்த தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள், தொகுதி மறுவரையறையினால் தங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவியது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 131வது அரசியல் சாசன திருத்த மசோதாவானது, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை மறுவரையறை செய்ய வழிவகுக்கிறது. இதன் மூலம் கடந்த 1ம் தேதி தொடங்கிய புதிய டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரி, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளிலும் இந்த மகளிர் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட நடைமுறைகளின் படி, நாடாளுமன்றத்தின் தற்போதைய பலமான 543 இடங்களை அதிகபட்சமாக 850 இடங்களாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால், குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக அமல்படுத்திய தென்மாநிலங்களின் அதிகாரம் குறையும் என்ற அச்சம் நிலவியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று மக்களவையில் புள்ளிவிவரங்களுடன் கூடிய விளக்கத்தை அளித்தார்.
அதன்படி, மக்களவை இடங்கள் 850 ஆக உயர்ந்தாலும், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது என்று உறுதியளித்தார். தற்போதுள்ள 543 இடங்களில் 5 தென் மாநிலங்கள் 129 இடங்களுடன் 23.76 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன. புதிய முறையின்படி 850 இடங்களில் அந்த மாநிலங்களுக்கு 195 இடங்கள் கிடைக்கும் என்றும், இதனால் அவர்களின் பிரதிநிதித்துவம் 23.87 சதவீதமாகச் சற்று உயருமே தவிர குறையாது என்றும் அவர் தெரிவித்தார். மாநில வாரியான தரவுகளின் படி, கர்நாடகாவிற்கு 28 இடங்களிலிருந்து (5.15 சதவீதம்) 42 இடங்களும் (5.14 சதவீதம்), ஆந்திராவிற்கு 25 இடங்களிலிருந்து (4.60 சதவீதம்) 38 இடங்களும் (4.65 சதவீதம்), தெலங்கானாவிற்கு 17 இடங்களிலிருந்து (3.13 சதவீதம்) 26 இடங்களும் (3.18 சதவீதம்) கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் முக்கிய திருப்பமாக, மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் மீதான காரசார விவாதங்கள் நடைபெற்றது. மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி மாலை 3 மணிக்கு உரையாற்றினார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மூன்றில் இரண்டு பங்கு கிடைக்குமா?
அரசியல் சாசனத் திருத்த மசோதாவை நிறைவேற்ற அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (சுமார் 362 வாக்குகள்) ஆதரவு தேவை என்பதால், ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியமாகிறது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 இடங்கள் உள்ளன. பா.ஜ.க தனித்து 240 இடங்களைப் பெற்றுள்ளது. இக்கூட்டணியில் அங்கம்வகிக்கும் தெலுங்கு தேசம் (16 இடங்கள்), ஐக்கிய ஜனதா தளம் (12 இடங்கள்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவுடன் 293 இடங்கள் உள்ளன. மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கும். அதேநேரம் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைப் பொறுத்தவரை, மக்களவையில் சுமார் 234 இடங்களைக் கொண்டுள்ளது.
இக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் (99 இடங்கள்), சமாஜ்வாதி கட்சி (37 இடங்கள்), திரிணாமுல் காங்கிரஸ் (29 இடங்கள்), தி.மு.க (22 இடங்கள்) ஆகிய கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீட்டை கொள்கை ரீதியாக ஆதரிக்கின்றன. ஆனால், அவர்கள் பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்; மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்காகக் காத்திருக்காமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைக்கின்றன. எனவே, வாக்கெடுப்பின் போது இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் திருத்தங்களைக் கொண்டு வர முயல்வார்கள். ஒருவேளை இக்கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், ஆதரவு அளிப்பதில் இழுபறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இன்றைய வாக்கெடுப்பில் பெரும்பாலான கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீட்டைத் தார்மீக அடிப்படையில் எதிர்க்கப் போவதில்லை என்பதால், சுமார் 450க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதாக்கள் நிறைவேற வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், உள் ஒதுக்கீடு மற்றும் அமலாக்கத் தேதி தொடர்பான விவாதங்கள் வாக்கெடுப்பின் போது பெரும் அரசியல் மோதலை உருவாக்கும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் மட்டுமே, இந்த மசோதாக்கள் எவ்வித தடையுமின்றி முழுமையான சட்ட வடிவம் பெறும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
