புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடி ஆற்றிய உரையில் பல்வேறு முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்கட்சிகள் ஆதரவளித்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த 2023ம் ஆண்டில் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட போதிலும், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதனை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்கு பிரதமர் மோடி நேற்று விளக்கம் அளிக்கவில்லை. தற்போது 2029ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இதனை அமல்படுத்த ஆர்வம் காட்டும் ஒன்றிய அரசு, ஏற்கனவே 2023ம் ஆண்டில் தாங்களே விதித்த நிபந்தனைகளை தற்போது நீக்கியது ஏன் என்பதும் மர்மமாகவே உள்ளது. மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் ஏற்கனவே 40 சதவீத பெண் எம்.பி.க்கள் உள்ளனர்.
ஆனால், மக்களவையின் பலத்தை 850 ஆக உயர்த்துவதற்கான காரணம் குறித்தோ, 750 அல்லது 800 ஆக ஏன் நிர்ணயிக்கவில்லை என்பது குறித்தோ பிரதமர் பேசவில்லை. மாநில சட்டப்பேரவைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றியோ அல்லது மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாதது குறித்தோ எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. கடந்த 2023ம் ஆண்டில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஏற்பட்ட காலதாமதத்திற்கு தனது ஒன்றிய அரசே பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்ளாத பிரதமர் மோடி, நேற்று ஆற்றிய உரையில் பழைய விஷயங்களையே மீண்டும் பேசினார். தொகுதி மறுவரையறை காரணமாக எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்றும், ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் விகிதாச்சார அடிப்படையில் பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.
ஆனால், அவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட வரைவில் இதற்கான எந்த உத்தரவாதமும் இடம்பெறவில்லை. தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின் 82வது பிரிவின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகும் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 131ம் அரசியல் சாசன திருத்தமானது இந்த நடைமுறையை மாற்றி, நாடாளுமன்றம் விரும்பும் போது மட்டுமே தொகுதி மறுவரையறை செய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. இது எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக தன்னிச்சையான முடிவுகள் எடுக்க வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, நேற்று தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவில் சில மாற்றங்களை செய்ய ஒன்றிய அரசு தள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இந்த மசோதா வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன்னதாக, கூடுதல் விதிகள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ சமநிலை குறித்த உத்தரவாதம் அரசியல் சாசனத்திலேயே சேர்க்கப்படாவிட்டால், வரும் 2029ம் ஆண்டுக்கு முன்னதாக மக்களவையில் சாதாரண பெரும்பான்மை மூலம் இதனை மாற்றிவிட முடியும். ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் அளிக்கும் உறுதிமொழி இறுதியானதாக கருதப்பட்டது, ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ‘மக்களவையில் பிரதமர் வெறும் வார்த்தைகளால் உறுதி அளிப்பதை ஏற்க முடியாது, மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க அரசியல் சாசன ரீதியான கேரண்டி வழங்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.
