பேச்சுவார்த்தையை நாடுவதாக ஈரான் அதிபர் தகவல் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி; மேலும் 2 வாரத்திற்கு போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பு

வாஷிங்டன்: ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். ஈரானும் போரை அல்ல, பேச்சுவார்த்தையை நாடுவதாக அந்நாட்டு அதிபர் மசூத் பெசேஷ்கியன் கூறி உள்ளார். இதற்கிடையே 2 வார கால போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்கா-ஈரான் இடையேயான 2 வார கால போர் நிறுத்தம் வரும் 22ம் தேதி முடிவுக்கு வர உள்ள நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான தீவிர முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இன்னும் 2 நாளில் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், பாக்ஸ் நியூஸ் சேனலில் நேற்று வெளியான அதிபர் டிரம்ப் பேட்டியில், ‘‘ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதாகவே கருதுகிறேன். முடிவுக்கு மிக அருகில் இருக்கிறது. நாங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஈரானிடம் அணு ஆயுதம் இருந்திருக்கும். அங்கிருப்பவர்களை நீங்கள் ‘ஐயா’ என பணிவாக அழைக்க வேண்டியிருக்கும். இப்போது அமெரிக்கா விலகிக் கொண்டாலும் ஈரான் தனது நாட்டை மீண்டும் கட்டமைக்க 20 ஆண்டுகள் ஆகும். அதுவரை அணு ஆயுதத்தை தயாரிக்க முடியாது. அதையும் நான் விரும்பாததால் தான் ஒப்பந்தம் செய்ய நினைக்கிறேன்’’ என்றார்.

இதே போல, ஈரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்தியில் அந்நாட்டு அதிபர் மசூத் பெசேஷ்கியன், ‘‘ஈரான் போரை விரும்பவில்லை. மாறாக பேச்சுவார்த்தையை விரும்புகிறது. அதே சமயம், அமெரிக்கா அதன் விருப்பத்தை திணிக்கவோ அல்லது ஈரானை சரணடையச் செய்யவோ செய்யும் எந்த முயற்சியும் தோல்வி அடையும்’’ என்றார். அதேசமயம், 2 வார கால போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான மத்தியஸ்தர்களின் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெயர் வெளியிடாத அதிகாரிகள் நேற்று கூறி உள்ளனர்.

விரைவில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கினாலும், மேலும் 2 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க மத்தியஸ்தர்கள் தரப்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் ஈரானும் கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தி, போர் இழப்பீடு ஆகிய 3 முக்கிய சர்ச்சைக்குரிய விவகாரங்களில் சமரச தீர்வை எட்ட மத்தியஸ்தர்கள் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

மேலும் படைகளை குவிக்கும் அமெரிக்கா: ஈரானுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் மத்திய கிழக்கிற்கு மேலும் 10,000 படை வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைப்பதாக தி வாஷிங்டன் போஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கை நோக்கி ஆப்பிரிக்காவை சுற்றி பயணித்துக்கொண்டிருக்கும் யுஎஸ்எஸ் ஜார்ஜ் டபிள்யு புஷ் போர்க்கப்பலிலும், அதனைச் சார்ந்த கப்பல் குழுவிலும் 6,000 வீரர்கள் இருப்பதாகவும் மற்றொரு 4,200 வீரர்கள் பாக்சர் ஆம்பிபியஸ் ரெடி குரூப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் இவர்கள் மத்திய கிழக்கை சென்றடைவார்கள்.

* செங்கடல் பாதையை மூடுவோம்: ஈரான்
அமெரிக்க கடற்படையின் முற்றுகைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா தனது முற்றுகையை தொடர்ந்து, ஈரானின் வர்த்தக கப்பல்கள் மற்றும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குமானால், அது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதற்கான முன்னறிவிப்பாகவே கருதப்படும். அதற்கு பதிலடியாக, பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடல் ஆகிய பகுதிகளில் எவ்விதமான ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் நடைபெறுவதை ஈரானின் வலிமைமிக்க ராணுவம் அனுமதிக்காது’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

* ஈரானின் அணுசக்தி மையங்களில் சோதனை?
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தில், ஈரானின் அணுசக்தி மையங்களை கடும் சோதனைக்கு உட்படுத்த மிக விரிவான நிபந்தனைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் ரபேல் க்ரோசி வலியுறுத்தி உள்ளார். ஈரான் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட 440.9 கிலோ யுரேனியத்தை வைத்திருப்பதாகவும், இது 90 சதவீத அணு ஆயுத தயாரிப்பை எட்டுவதற்கான அளவாக உள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தொடர்ந்து கூறிவருகிறது.

* சீனா குறித்து மாறுபட்ட கருத்து
பாக்ஸ் நியூஸ் சேனல் பேட்டியில் அதிபர் டிரம்ப், ‘‘ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டாம், போர் விரைவில் முடிவுக்கு வரும் என சீன அதிபர் ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதினேன். அதற்கு அவர் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என பதிலளித்தார்’’ எனக் கூறினார். பின்னர் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில் டிரம்ப், ‘‘ஹார்முஸ் ஜலசந்தியை நிரந்தரமாக திறக்கப்படுவதை அறிந்து சீனா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. நான் இதை அவர்களுக்காகவும் உலகத்திற்காகவும் செய்கிறேன். இதுபோன்ற சூழல் இனி ஒருபோதும் ஏற்படாது. ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பப் போவதில்லை என சீனா ஒப்புக் கொண்டது’’ என மாறுபட்ட கருத்து கூறினார்.

* சீன கப்பலை திருப்பி அனுப்பிய அமெரிக்கா
ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து கப்பல்களையும், அவற்றின் கொடியைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தும் முற்றுகை நடவடிக்கை நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட சீன நாட்டு கப்பலான ரிச் ஸ்டாரி, நேற்று முன்தினம் வளைகுடாவில் இருந்து வெளியேறி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. ஆனால் இந்த கப்பல் பிற்பகலில் மீண்டும் திரும்பி சபாஹார் துறைமுகத்திற்கு சென்றது. அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல் 24 மணி நேரத்தில், எந்தக் கப்பலும் அமெரிக்க முற்றுகையைத் தாண்டி செல்லவில்லை.

அமெரிக்கப் படைகளின் உத்தரவுக்கு இணங்கி 6 வர்த்தகக் கப்பல்கள் திரும்பிச் சென்றன’ என கூறி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் பிராந்திய நீர்ப்பரப்பின் ஒரு பகுதி என்றும், போருக்கு முன்பாக அங்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என ஈரான் கூறி உள்ளது. தற்போது போருக்கு பிறகு ஈரான் தனது இறையாண்மை உரிமையை பயன்படுத்துவதாகவும், கடல் பகுதியில் ஈரானைத் தடுக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகள், உலகப் பொருளாதாரம் மற்றும் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு உதவாது என்றும், ஈரான் மீதான இந்தக் கடற்படை முற்றுகை, உலகப் பொருளாதாரத்திற்கு எதிராக அமெரிக்கா அறிவித்துள்ள ஒரு போர்ப் பிரகடனம் என்றும் ஈரான் கண்டித்துள்ளது.

Related Stories: