மதுரை: தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் வினோத். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: எம்பி, சட்டசபை தேர்தல்களில் வேட்பாளர்களை நிராகரிக்க மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் நோட்டா இடம் பெற்றுள்ளது. இது வாக்காளர்களுக்கு அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி வரவிருக்கும் அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களிலும் நோட்டா இடம்பெற மாநில அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பினேன். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், உள்ளாட்சித் தேர்தல்களிலும் நோட்டா விருப்பத்தை அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023ல் உள்ளது போலவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளில் நோட்டாவை சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காகத் தமிழ்நாடு ஊராட்சிகள் விதிகள், 1995ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி, 2024 ஜூன் 7ம் தேதி தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டவுடன், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் நோட்டா முறை, நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது. இதை பதிவு செய்த நீதிபதிகள் தமிழக தலைமை செயலர் 6 மாதங்களில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
