சென்னை: தமிழக பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தமிழக வெற்றி கழகம் தமிழக காவல்துறையில் ஏன் உடனடியாக புகார் அளிக்கவில்லை என்று தவெகவின் நாடக அரசியலை சுட்டிக்காட்டிய உடன் சைபர் க்ரைம் போலீசில் அவசர அவசரமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. படத்தை தாங்களாக வெளியிட்டு தவறை செய்துவிட்டு அதை மறைக்க கொடுக்கப்பட்ட இந்த மோசடி புகார் குறித்த உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.
சென்சார் போர்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனநாயகன் படம் வெளியானதில் ஒன்றிய அரசுக்கு ம் ஒன்றியஅமைச்சருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதால் 500 கோடி ரூபாய்க்கு மேல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என்று களவாணி அரசியல் நடத்தி, மக்களை ஏமாற்றி பரிதாப வாக்குகளைப் பெற நாடகம் ஆடுவது நியாயமா?
பாஜ மீதும் ஒன்றிய அமைச்சர் முருகன் மீதும் பொய் குற்றம் சாட்டி அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்கிற தீய அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பிவிட்டு அம்பேத்கர் தான் எங்கள் கொள்கை தலைவர் என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? இதுகுறித்து விசாரிக்க சிபிஐ விசாரணையை நடிகர் விஜய் கேட்க தயாரா? இதுவரை ஏன் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தமிழக வெற்றி கழகம் தமிழக காவல்துறையில் புகார் அளிக்கவில்லை?
படம் இணையத்தில் கசிந்ததற்கு மத்திய அமைச்சர் முருகனும் காரணம் என்று அரசியல் வியாபாரி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியது தேர்தல் அரசியலுக்காக சொல்லப்பட்டுள்ள மன்னிக்க முடியாத வடிகட்டிய பொய். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக பாஜ எடுக்கும்.
எம்ஜிஆரையும் விஜய்யையும் இணைத்து பேசி அதிமுக ஓட்டுகளை பிரிக்கலாம் மற்றும் விஜய்யின் ஜனநாயகன் படம் இணையத்தில் கசிய விட்டு பாஜவிற்கு எதிராக அவதூறு பேசி வாக்காளர்களை குழப்பி ஆதாயம் தேடலாம் என திட்டமிட்டு சதி அரசியல் செய்யும் ஆதவ் அர்ஜுனாவின் கீழ்த்தரமான பகல் கனவு பலிக்காது. அமைச்சர் முருகன் மீது பொய் குற்றச்சாட்டின் மூலம் ஆதவ் அர்ஜுனாவின் தீய எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
