சென்னை: உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம் செய்யப்பட்டு மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், போலீஸ் கமிஷனர் அருண், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தாம்பரம், மதுரை கமிஷனர்கள், சேலம், தூத்துக்குடி கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 எஸ்பிக்களும் மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம் செய்யப்படுவார் என்று நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. அதேபோல உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் புதிய உள்துறைச் செயலாளராக இந்து அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றப்பட்ட உள்துறைச் செயலாளர் தீரஜ்குமாருக்கு தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளும் வழங்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
அதேபோல, உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் சென்னையில் பணியாற்றும் சில போலீஸ் அதிகாரிகளை மாற்றவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
* லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றல் உத்தரவு வாபஸ்
லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீரென மாற்றப்பட்டு, சைபர் க்ரைம் டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தேர்தலில் தொடர்பு இல்லாத லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் மாற்றத்தை எதிர்த்து திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உத்தரவை வாபஸ் பெறவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எச்சரித்திருந்தது.
அதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவு தற்போது மாற்றியமைக்கப்படுகிறது. ஆயுதப்படை டிஜிபியாக மட்டும் சந்தீப் மிட்டல் நியமிக்கப்படுகிறார். அவர் உடனடியாக புதிய பணியிடங்களில் சேர வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறியிருந்தது. அந்த மாறுதல் உத்தரவில் லஞ்ச ஒழிப்புத்துறையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை பதவியில் இருந்து டேவிட்சன் ஏற்கனவே மாற்றப்பட்டதால், அவரை மீண்டும் அதே பதவியில் நியமிக்க தமிழக அரசு தனியாக உத்தரவிட வேண்டும். தற்போது தேர்தல் காலம் என்பதால் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் சேர்ந்து இந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இதனால் ஓரிரு நாளில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
