வெளியுறவு செயலர் தகவல் இந்தியா-அமெரிக்கா இடையே சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு: எல்பிஜி ஏற்றுமதி குறித்து ஆய்வு

வாஷிங்டன்: இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட்டுடனான சந்திப்பில், அணுசக்தி துறையிலும், நிலக்கரி வாயுவாக்கம் மற்றும் எல்பிஜி ஏற்றுமதி போன்ற புதிய துறைகளில் அமெரிக்காவுடனான எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்துள்ளார். இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி 3 நாள் பயணமாக கடந்த 8ம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்த மிஸ்ரி நேற்று முன்தினம் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட்டை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், இருதரப்பு எரிசக்தி வர்த்தகத்தை வலுப்படுத்துதல் மற்றும் இந்திய-அமெரிக்க எரிசக்தி கூட்டாண்மையை உறுதிப்படுத்த புதிய வழிகளை கண்டறிதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பில் உடனிருந்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜி கோர் தனது சமூக ஊடக பதிவில், ‘‘இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சாந்தி மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நிலக்கரி வாயுவாக்கம், எல்பிஜி ஏற்றுமதி போன்ற பிற துறைகளுடன் கூடுதலாக சிவில் அணுசக்தி துறையிலும் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. வர்த்தகம், பாதுகாப்பு முதல் எரிசக்தி வரை இந்தியாவுடன் அமெரிக்கா நெருக்கமாக இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது’’ என கூறி உள்ளார். இதுவரை அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையில் ‘நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம் (சாந்தி)’ மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

* விமானப்படை தளபதி பயணம்
இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங்கும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் அமெரிக்க பாதுகாப்பு துறை துணை செயலாளர் ஸ்டீவ் பியன்பெர்க், ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கால் மற்றும் தூதர் செர்ஜி கோர் ஆகியோரை சந்தித்து பேசினார். இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் விற்பனை தொடர்பாக தளபதி ஏ.பி.சிங் ஆலோசனை நடத்தி உள்ளார்.

Related Stories: