பாகூரில் என்ஆர் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் புகைப்பட ஆதாரத்துடன் மகளிர் ஆணைய தலைவி மீது புகார் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா? அதிகாரிகள் விசாரணை

புதுச்சேரி, மார்ச் 31: புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவி நாகஜோதி பாகூரில் என்ஆர் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக புகைப்பட ஆதாரத்துடன் 1950ல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி மாநில மகளிர் ஆணைய தலைவியாக பாகூரை சேர்ந்த நாகஜோதி கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இவருக்கு மதிப்பூதியமாக மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நியமனம் தொடர்பான உத்தரவு பிறப்பிட்ட தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் நாகஜோதி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சமயம், ஆட்சியாளர்கள் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்யாமல், கொள்ளைப்புறமாக மகளிர் ஆணையத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், கடந்த ஓராண்டுக்கு மேலாக மகளிர் ஆணைய தலைவியாக நாகஜோதி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.9ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலிலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அரசியல்கள் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கூடாது. இதனை மீறி பிரசாரம் செய்தால், அவர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கை பாயும். அதேபோல், வாரிய தலைவர் பதவிகளில் இருப்பவர்களும், அதனை ராஜினாமா செய்துவிட்டுதான் அரசியல் கட்சி பிரசாரங்களில் ஈடுபட வேண்டும். ஆனால், மகளிர் ஆணைய தலைவர் நாகஜோதி நேற்று பாகூரில் என்ஆர் காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை மற்ற அரசியல்கட்சியை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, உடனே துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் பாகூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகார் உறுதி செய்யப்பட்டால், மகளிர் ஆணைய தலைவி மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: