திமுக வேட்பாளர் பாலு வீதி வீதியாக தீவிர பிரசாரம்

குமாரபாளையம், ஏப்.12: குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.பாலு, நேற்று குமாரபாளையம் வடக்கு நகராட்சியில் வாக்கு சேகரித்தார். கத்தாளைப்பேட்டை பகுதியிலிருந்து இரண்டாவது நாளாக அவர் உதயசூரியன் சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர், காளியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார். 2021ல் தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தான், நல்ல நல்ல திட்டங்கள் கிடைத்துள்ளது. படித்த இளைஞர்கள் போட்டித்தேர்வில் பங்கேற்று பயனடையும் வகையில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாரச்சந்தை இன்று ஒரு கூரையின் கீழ் வெயில் மழையால் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு கான்கிரீட் கூரையுடன் சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. சிறு விசைத்தறி கூடங்களுக்கு ஆயிரம் யூனிட் வரையும் கைத்தறி நெசவுகூடங்களுக்கு 450 யூனிட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தேர்தலுக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்றதும் மகளிர் உரிமைத்தொகையை மாதம் 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும், விவசாயிகளுக்கு இலவசமாக பம்புசெட்டுகள் வழங்கவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவர் சொன்னதை நிச்சயம் செய்வார். 20 வருடங்களாக ஒருவருக்கே வாக்களித்த போதும், குமாரபாளையம் நகரத்தில் தொழில் வளர்ச்சியும், வருமானமும் இல்லாமல் தொழிலாளர்கள் துன்பப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில், இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ராஜராஜன் நகர், பெராந்தார்காடு, வேதாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருடன் நகர திமுக பொறுப்பாளர் விஜயகண்ணன், அதிமுக முன்னாள் நகர செயலாளர் நாகராஜன், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் மகாலிங்கம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் ஆதரவு திரட்டினர்.

Related Stories: