திருச்செங்கோடு, ஏப்.8: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள செங்குந்தர் பொறியியல் கல்லூரியில்(தன்னாட்சி) மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில், லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் தாளாளர் செயலாளர் பாலதண்டபாணி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார். செயல் இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
இதில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவி உமாதேவி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் தகவல் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தவும், இன்டர்ன்ஷிப், பயிற்சி பட்டறை, ஆராய்ச்சி வழிகாட்டுதல், ஆசிரியர் மேம்பாட்டு திட்டம், மற்றும் வேலை வாய்ப்பு போன்றவைகளுக்கு இந்த ஒப்பந்தம் பயனுள்ளதாக அமையும். லூகாஸ் டிவிஎஸ் நிறுவன பொதுமேலாளர் உதயகுமார், செங்குந்தர் கல்லூரி தாளாளர் செயலாளர் பாலதண்டபாணி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
