சேந்தமங்கலம், ஏப்.12: சேந்தமங்கலம் வட்டாரத்தில் கொப்பரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேந்தமங்கலம் வட்டாரத்தில் கொல்லிமலை அடிவார பகுதியான வாழவந்திகோம்பை, நடுக்கோம்பை, பொம்மசமுத்திரம், பெரிய பள்ளம்பாறை, சின்னப்பள்ளம்பாறை, காளப்பநாயக்கன்பட்டி, வெண்டாங்கி, பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, கல்குறிச்சி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பரவலாக தென்னை சாகுபடி செய்துள்ளனர். கொல்லிமலை அடிவார பகுதி என்பதால் மிதமான தட்பவெப்ப காரணமாக தென்னை செழித்து வளர்ந்து திரட்சியான காய்கள் கிடைக்கிறது. இப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளை பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் குத்தகை எடுத்து, கொப்பரையை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மேலும், அப்பகுதி விவசாயிகள் தாங்களே கூலி ஆட்களை வைத்து தேங்காய்களை பறித்து அதனை வெட்டி உலர் களத்தில் காய வைத்து பருப்பை தனியாக பிரித்தெடுத்து கொப்பரையாக்கி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக கொப்பரை விலை சரிந்து வந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.145 முதல் ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட கொப்பரை இந்த வாரம் விலை உயர்ந்துள்ளது. முதல் தரம் கிலோ ரூ.150 முதல் ரூ.165 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டாம் தரம் ரூ.147 முதல் ரூ.158 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், `சேந்தமங்கலம் வட்டார பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்ததால் தேங்காய் விலை குறைந்தது. தற்போது, தேங்காய் அறுவடை நிறைவு பெறும் நிலையில் உள்ளதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால், கொப்பரை விலை உயர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது,’ என்றனர்.
