அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை

சேந்தமங்கலம், ஏப்.12: கொல்லிமலை பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் பூமலர் உறுதியளித்து வாக்கு சேகரித்தார். சேந்தமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் பூமலர், கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று கொல்லிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழவந்தி நாடு ஊராட்சி, திண்ணனூர் நாடு ஊராட்சி, சேலூர்நாடு ஊராட்சி, தேவனூர்நாடு ஊராட்சி, வளப்பூர் நாடு ஊராட்சி, தேவனூர் அரியூர்நாடு ஊராட்சி, குண்டூர் நாடு ஊராட்சி பகுதி கிராமங்களில், ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்முருகன் தலைமையில், ஊராட்சி பொறுப்பாளர்கள் பாலசுந்தரம், பழனிசாமி முன்னிலையில், வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.

பொதுமக்கள் மத்தியில், வேட்பாளர் பூமலர் பேசுகையில், `முதல்வர் மு.க.ஸ்டாலின், கொல்லிமலை மலைவாழ் மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது. கொல்லிமலை முழுவதும் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 14 ஊராட்சிகளில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம், இதுவரை 1000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மிளகிற்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை வாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ், வனத்துறை நிலத்தை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மீண்டும் திமுக அரசு அமைந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளர் ஆனந்தபாபு, துணை பொறுப்பாளர் கோபிநாத், தொமுச தலைவர் உமாசங்கர், தேமுதிக ஒன்றிய செயலாளர் செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: