×

தேர்தல் பிரச்சாரம் நடக்கவிடாமல் தடுக்கவே நிரந்தர கட்டிடங்களில் தேர்தல் பணிமனை என்ற நிபந்தனை விதிப்பு: உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம்

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தை நடத்த விடாமல் செய்வதற்காகவே தற்காலிக தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடத்தில் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளால் அமைக்கப்படும் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதிகளில் திருத்தம் செய்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ சார்பில் அவரது பிரதிநிதி முத்துக்குமார பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தற்காலிக இடத்தில் பணிமனைகள் செயல்படலாம் என்று தெரிவித்த தேர்தல் ஆணையம் திடீரென நிரந்தர கட்டிடத்தில் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. குறைந்த காலத்திற்காக நிரந்தர கட்டிடத்தில் பணிமனை செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்க கூடாது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் கட்சிகளின் பிரச்சாரம் பாதிக்கப்படும்.

கல்வி நிறுவனம், கோவில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அலுவலகம் திறக்க கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. நிரந்தர கட்டிடத்தில் தற்காலிக பணிமனை அமைப்பது கிராம புறங்களில் முடியாத காரியமாகும். நடைமுறையில் சாத்தியம் இல்லாத நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்காக கட்டிடம் கட்ட முடியாது. தேர்தல் விதி அமல்படுத்திய பின் எதையும் மாற்ற முடியாது என்றால், நிரந்தர கட்டிடம் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மட்டும் எப்படி விதிகளில் திருத்தம் கொண்டு வர முடியும்?.

கட்சி பணிமனைகள் என்பது மக்கள் கூடும் இடமாக இருக்காது. கட்சி நிர்வாகிகள் மட்டுமே இருப்பார்கள். நிரந்தர கட்டிடத்தில் தான் பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று வாதிட்டார். தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், தற்காலிக கட்டிடங்களுக்கு எதிராக புகார்கள் வந்தது. அதனால் நிரந்தர கட்டிடத்தில் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. தீ விபத்து மற்றும் மின்சார கசிவு ஏற்படாமல் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பு காரணமாகவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்காலிக கூடாரத்தால் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதற்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு என்பதால் நிரந்தர கட்டிடம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பாதுகாப்பான இடங்களை பரிந்துரை செய்தால் அந்த இடங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனிப்பட்ட யாருக்கும் இந்த விதிமுறை விதிக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் அனைவருக்கும் பொதுவான நிபந்தனையை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது என்று தெரிவித்து தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

Tags : DMK ,Chennai ,Chennai High Court ,Election Commission ,
× RELATED செல்போனில் எப்போதும் அரட்டை: கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை