×

வாக்குப்பதிவு நாளான 23ம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலக பாதுகாப்பு இயக்குநர் எச்சரிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப். 23ம் தேதி விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலக பாதுகாப்பு இயக்குநர் ஆனந்த் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ஐ முன்னிட்டு, மாற்று முறையாவணங்கள் சட்டம், 1881, பிரிவு 25ன்படி வாக்குப்பதிவு நடைபெற உள்ள 23.4.2026 (வியாழக்கிழமை) பொது விடுமுறை தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செ.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135B-ன் கீழ் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

எனவே, அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாக்குப்பதிவு நாளான 23.4.2026 அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்க ஏதுவாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். எம்.வி.கார்த்திகேயன், இணை இயக்குநர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், திருவொற்றிவூர்,

தொலைபேசி எண் 9444221011. எஸ்.கமலக்கண்ணன், இணை இயக்குநர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சென்னை 9884675712. எஸ்.சூரியா, நிர்வாக அலுவலர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இயக்குநர் அலுவலகம், சென்னை 9884470526. த.மணிசங்கர், துணை இயக்குநர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், காஞ்சிபுரம் 9940468249. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Industrial Safety Director ,Chennai ,Anand ,Tamil Nadu Assembly ,Tamil Nadu Assembly elections 2026 ,
× RELATED ஐபிஎல் போட்டியை காண மெட்ரோ ரயிலில்...