×

வெறுப்பு அரசியல் பரப்புகின்ற பாஜவை தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: வெறுப்பு அரசியல் பரப்புகின்ற பாஜவை தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவ மக்கள், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்துரையாடினார். சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

திமுகவுக்கும் சிறுபான்மையின மக்களுக்குமான உறவு இன்றைக்கோ நேற்றோ உருவான உறவு கிடையாது. கலைஞர் கிறிஸ்தவ மக்கள் மீது மிகுந்த பேரன்பு கொண்டவர். அதே மாதிரிதான் எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலினும் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். இன்னும் 13 நாட்களில் சட்டமன்றத் தேர்தல், இந்த நாட்டை மீண்டும் யார் ஆளப் போகிறார்கள் என்கின்ற அந்த தேர்தல் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டைப பாதுகாக்கக்கூடிய, உங்களின் உரிமைகளை எல்லாம் பாதுகாக்கக்கூடிய நம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்கின்ற அந்த எண்ணம், இன்று நம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் மக்களின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. இன்று இந்தியாவின் நிலைமை உங்களுக்கு தெரியும்.

இன்று தமிழ்நாட்டைத் தவிர இந்தியா முழுவதும் வெறுப்புப் பிரசாரம் நடந்தாலும், மதவாதம் தலைதூக்கி ஆடினாலும், தமிழ்நாடு என்றைக்குமே ஒரு அமைதிப் பூங்காவாகத்தான் இன்று நாம் திகழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் நீங்களும் நானும் தான், அதற்கு காரணம் நம் திமுக அரசு தான், நம் முதல்வர் தான். வடநாட்டில் பாசிச சக்திகள் இன்று தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு சமீபத்தில் கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்களை எல்லாம் குறி வைத்து ஃபாரின் கான்ட்ரிப்யூஷன் ரெகுலேஷன் அமெண்ட்மென்ட் என்று ஒரு சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ. அரசு இன்று கொண்டுவரப் பார்க்கிறது. வெளிநாட்டிலிருந்து தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதியை முறைப்படுத்தப் போகிறோம் என்கின்ற பெயரில் நடக்கப்போகின்ற மிகப்பெரிய ஒரு சூழ்ச்சி இது. விதிமுறைகளை மீறிவிட்டார்கள் என்று பொய்க்காரணத்தைச் சொல்லி கிறிஸ்தவ நிறுவனங்களின் சொத்துகளை அபகரிக்கின்ற முயற்சிதான் இந்த முயற்சி.

வக்பு சட்டத் திருத்தம் மாதிரி கிறிஸ்தவ நிறுவனங்கள் மேல் நடத்துகின்ற ஒரு நேரடித் தாக்குதல் இந்த தாக்குதல். இது ஒரு சின்ன உதாரணம்தான். தமிழ்நாட்டு அரசியல் எப்போதுமே தனித்துவமான அரசியல். மதநல்லிணக்கத்தைப் பேசுகிறவர்களைத்தான் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிப்பார்கள், மதநல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களைத்தான் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே கொண்டாடுவார்கள். வெறுப்பு அரசியல் பரப்புகின்ற பாஜவை தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

இன்று நேரடியாக வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்துதான், அடிமைகளையும் துரோகி கூட்டத்தையும் கூட்டணியில் சேர்த்து கொண்டு இன்று சங்கி கூட்டம், பாசிசக் கூட்டம் உள்ளே நுழையப் பார்க்கிறது. தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற சிறுபான்மையினர் விரோத பாஜவை, இன்று அதிமுகவுடைய தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் தோள் மேல் தூக்கி வைத்துக்கொண்டு நுழையப் பார்க்கிறார்.

பாசிஸ்டுகளையும் அடிமைகளையும் இந்த தேர்தலில் நாம் ஓட ஓட விரட்ட வேண்டும். அதற்குச் சிறுபான்மையின மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சமூக மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்கக்கூடிய திமுகவிற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பாஜவை துணிச்சலோடு எதிர்த்து நிற்கக்கூடிய நம் தலைவரின் கரத்தை நீங்கள் அனைவரும் சேர்ந்து பலப்படுத்த வேண்டும். நம் தலைவர் சொன்ன மாதிரி வருகின்ற தேர்தல், \\”தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி\\” என்பது தான் இந்தத் தேர்தல்.

மதநல்லிணக்கத்துக்கும் பாசிசத்துக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தல் இந்த சட்டமன்றத் தேர்தல். இதில் நம் வெற்றி உறுதியான வெற்றியாக இருக்க வேண்டும். திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். நம் முதல்வர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு உங்களின் பேராதரவை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,BJP ,Deputy ,Udayanidhi Stalin ,Chennai ,Udayaniti Stalin ,Deputy Chief ,Udayanidhi ,Chennai Chepakam-Thiruvallikeni ,
× RELATED ஐபிஎல் போட்டியை காண மெட்ரோ ரயிலில்...