சென்னை: ஏழு ஆண்டுகளாக நடமாட்டமின்றி இருந்த பெண்ணுக்கு 48 மணி நேரத்தில் குணமளிக்க தொடங்கிய சிக்கலான மூளை அறுவை சிகிச்சை செய்து வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மூளையின் சரிபாதியை ஆக்கிரமித்திருந்த பெரிய கட்டியை அகற்றி, 59 வயது பெண்ணுக்கு அதிக ஆபத்து நிறைந்த மூளை அறுவை சிகிச்சையை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சுவாசிப்பதற்கு ட்ரக்கியோஸ்டமி (தொண்டைக் குழாய்) உதவியுடன் படுத்த படுக்கையாக இருந்த இந்த பெண், அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள் குணமடைவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கினார். வடபழனி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, நோயாளியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. பரிசோதனைகளில் மூளையின் முன்பகுதியில் ஒரு பெரிய கட்டி இருப்பதும், அது மூளையின் மற்ற பகுதிகளை கடுமையாக அழுத்துவதும் தெரியவந்தது.
அவர் நீண்ட நாட்களாக படுக்கையில் இருந்தது, ட்ரக்கியோஸ்டமி மற்றும் ஒட்டுமொத்த உடல் பலவீனம் போன்றவற்றால் இந்த அறுவை சிகிச்சை செய்வதில் அதிக ஆபத்து இருந்தது. இருப்பினும், டாக்டர் ரங்கநாதன் ஜோதி தலைமையிலான அறுவை சிகிச்சை மருத்துவர்கள் குழு, மண்டையோட்டின் முன்பகுதியை திறந்து கட்டியை முழுமையாக அகற்றினர். கட்டி அகற்றப்பட்ட பிறகு, நோய்த்தொற்று அல்லது மூளை-தண்டுவட திரவக் கசிவு போன்ற பக்க விளைவுகளை தவிர்க்க, நோயாளியின் சொந்த திசுக்களை கொண்டே அப்பெண்ணுடைய மண்டையோட்டின் அடிப்பகுதி சீரமைக்கப்பட்டது.
இதுகுறித்து வடபழனி காவேரி மருத்துவமனையின் நரம்பியல் துறை இயக்குநரும், மூளை மற்றும் தண்டுவட அறுவைசிகிச்சை குழுவின் தலைவருமான டாக்டர் ரங்கநாதன் ஜோதி கூறியதாவது: ஏற்கனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்ட மூளைப் பகுதியில் மறு அறுவை சிகிச்சை செய்வது, அதிக ஆபத்து நிறைந்த ஒரு பெரிய சவாலாகும். முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் மூளையின் முக்கிய பகுதிகளுக்கு அருகில் கட்டி இருந்ததாலும், காயத்தழும்புகள், மூளையின் அமைப்பில் ஏற்பட்டிருந்த மாற்றங்களாலும் இந்த சிகிச்சை மிகவும் சிக்கலானதாகவும், அதிக துல்லியம் தேவைப்படுவதாகவும் அமைந்தது.
இந்த அறுவை சிகிச்சைக்கு நோயாளி நன்கு ஒத்துழைத்து, பதில்வினையாற்றியிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு முந்தைய நிலையிலிருந்து மாறி, இவ்வளவு விரைவாக அவர் குணமடைந்து வருவது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். மறுவாழ்வு பெற்று இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இதுவொரு நல்ல தொடக்கமாகும்.
காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனரும் மற்றும் செயலாக்க இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: எங்கள் மருத்துவக் குழுவின் நிபுணத்துவம், சிறப்பான திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சியின் வெற்றிகரமான சிகிச்சை விளைவை இந்த சவாலான அறுவை சிகிச்சை நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
