சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சி.என்.ராமமூர்த்தி நேற்று நேரில் சந்தித்து, திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவருமான சி.என்.ராமமூர்த்தியும்-துணைத் தலைவர் கே.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஜோசப்ராஜ் நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி நிர்வாகிகள் – தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தார்.
அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் சி.என்.ராமமூர்த்தி அளித்த பேட்டியில், ‘‘ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். இன்று (நேற்று) முதல்வரை நேரில் சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்காக நேரில் ஆதரவு தெரிவித்தோம்.
திமுக அரசு பொருளாதார நடவடிக்கை, கல்வி என அனைத்திலும் சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். அனைத்து தொகுதியிலும் திமுக கூட்டணிக்கு பரப்புரை செய்ய இருக்கிறோம். இடஒதுக்கீடு கேட்டு உயிர் நீத்தவர்களுக்கு திமுக அரசு பல உதவிகள் செய்தது. கலைஞர் பல திட்டங்களை செய்தார்” என்றார்.
