ஜீரோ பிஜேபி பிரசார இயக்கம் பாஜ வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் பேட்டி

சென்னை: ஜீரோ பிஜேபி பிரசார இயக்கம் மூலம் பாஜ வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜீரோ பிஜேபி பிரசார இயக்கம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தது. இதில், பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர், ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன், அமைச்சர் மனோ தங்கராஜ், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், சுற்றுச்சூழல் ஆர்வலர் கனகராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் குறுக்கு வழியில் ஊடுருவி விடலாம் என பாஜ அதன் அமைப்புகளை ஏவி விடுகிறது. தமிழ்நாட்டில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். தேர்தலையொட்டி தான் ஜீரோ பிஜேபி பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் 27 இடங்களில் மட்டும் இல்லை, கூட்டணியில் உள்ள கட்சியின் 5 இடங்களில் சேர்த்து 32 இடங்களில் பாஜவை டெபாசிட் இழக்க செய்வோம்.

நாடாளுமன்ற தேர்தலை போல, சட்டப்பேரவை தேர்தலிலும் ஓட்டு திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தல் வெளிப்படையான தேர்தலாக நடைபெற வேண்டும். Zerobjp.com என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். கட்சிகள் 17சி என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் இணையதள பக்கத்தில் ஏற்றுவோம். மக்கள் இந்த தேர்தலில் விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். தேர்தலில் நடக்கும் வாக்கு திருட்டை தடுக்கவே இந்த இணையதளம். பாஜவிற்கு வாக்களித்தால் திருப்பரங்குன்றம் போல் அனைத்து இடங்களிலும் பிரச்னை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories: