சென்னை: ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் குறித்த விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ராமநாதபுரம் மக்களவை தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினரான நவாஸ்கனி 2019ம் ஆண்டும், 2024ம் ஆண்டும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் கூறியுள்ள விவரங்களின் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக 23 கோடியே 58 லட்சம் ரூபாய் சொத்து குவித்துள்ளதால் அதுகுறித்து சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதேபோல, வருமானத்தை மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த வருமான வரி கணக்கு குறித்த ஆவணங்களின் நகல்களை சீல் வைக்கப்பட்ட உறையில் வருமான வரித்துறை அதிகாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல, சிபிஐ தரப்பில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள், இந்த ஆவணங்களை பத்திரமாக வைத்திருந்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
