தலைமை செயலாளர், டிஜிபி, 2 கமிஷனர்கள் உள்ளிட்ட தமிழக அதிகாரிகளை மாற்றிவிட்டு வடமாநில அதிகாரிகள் நியமனம்: தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம்

சென்னை: தலைமைச் செயலாளர், டிஜிபி, 2 கமிஷனர்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழக அதிகாரிகளை மாற்றிவிட்டு வடமாநில அதிகாரிகளை தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே நியமிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் வருகிற 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் நேர்மையான மற்றும் மக்களுக்கு உண்மையான தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் நேர்மையான, திறமையான அதிகாரிகளை தேர்ந்தெடுத்து அவர்களை முக்கியமான பதவிகளில் நியமித்து வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

குறிப்பாக முக்கியமான பதவிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து வந்தார். அதன்படி, தலைமைச் செயலாளராக சென்னையைச் சேர்ந்த முருகானந்தம், டிஜிபியாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட் ராமன், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனராக அருண், தாம்பரம் கமிஷனராக அமல்ராஜ் மற்றும் பல்வேறு நகர கமிஷனர்களாக நியமிக்கப்பட்டனர். அதோடு மாவட்டங்களில் எஸ்பிக்களாக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாக எஸ்பிக்களாக உள்ளவர்கள் நியமிக்கப்பட்டனர்.

கலெக்டர்களாகவும், முக்கிய துறைகளின் செயலாளர்களாகவும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதேநேரத்தில் மற்ற மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அவர்களது திறமைக்கு ஏற்றவாறு நியமிக்கப்பட்டனர். குறிப்பாக உள்துறைச் செயலாளராக தீரஜ்குமார் மற்றும் துணை முதல்வரின் செயலாளராக பிரதீப் யாதவ், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது போலீசில் பதவி உயர்வுக்குப் பிறகு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அரியானா மாநிலத்தச் சேர்ந்த மகேஸ்வர் தயாள் நியமிக்கப்பட்டிருந்தார். உளவுத்துறை டிஜிபியாக கர்நாடகாவைச் சேர்ந்த பாலநாகதேவியும் நியமிக்கப்பட்டார். சிறைத்துறை டிஜிபியாக கேரளாவைச் சேர்ந்த சங்கர் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில்தான் தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் நேர்மையான அதிகாரிகள் பணியில் இருந்தால் தவறு நடக்க அனுமதிக்க மாட்டார்கள்.

அதனால் நமக்கு வேண்டியவர்களை நியமிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். அதை தேர்தல் ஆணையத்தில் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார். அவர் பட்டியலில் உள்ள அதிகாரிகளை மாற்றுவதோடு, இந்த பதவிகளுக்கு குறிப்பிட்ட அதிகாரியைத்தான் போட வேண்டும் என்றும் எடப்பாடி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த பதவிகளை அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்தே அதிகாரிகளை நியமிப்பது குறித்து முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி தமிழக அதிகாரிகளான தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய்குமார், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, டெல்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோரும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு பதிலாக டெல்லியைச் சேர்ந்த சந்தீப் மிட்டல், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சஞ்சய்குமார், மதுரை கமிஷனராக இருந்த கடலூரைச் சேர்ந்த லோகநாதன் மாற்றப்பட்டு உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த அபிஷேக் தீக்சித் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மேற்கு மண்டலத்திற்கு மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த சரவண சுந்தர் மாற்றப்பட்டு தூத்துக்குடியைச் சேர்ந்த ரம்யா பாரதி நியமிக்கப்பட்டார். அதேபோல், மாற்றப்பட்ட 8 எஸ்பிக்களில் 4 எஸ்பிக்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதில், கரூருக்கு நியமிக்கப்பட்ட ஹரிகிரன் பிரசாத், ஈரோடுக்கு நியமிக்கப்பட்ட கிரண் சுருதி, நாகப்பட்டினத்திற்கு நியமிக்கப்பட்ட சுர்ஜித்குமார், விருதுநகருக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீநாதா ஆகியோர் அடங்கும்.

மேலும், தேர்தல் ஆணையம் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றிவிட்டு வட மாநில அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்காக தமிழகத்தைச் சேர்ந்த நேர்மையான, திறமையான அதிகாரிகளை மாற்றிவிட்டு வடமாநில அதிகாரிகளை நியமிப்பதற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் கடும் சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: