மானாமதுரை அருகே கிராமமக்கள் அவதி குண்டும், குழி சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்

மானாமதுரை, பிப்.21:  மானாமதுரை அருகே சிப்காட்டின் மேற்குபகுதியில் உள்ள கங்கையம்மன்நகர், கலைக்கூத்து நகர், மாரியம்மன் நகர் உள்ளிட்ட தினக்கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை பத்து ஆண்டுகளாக சேதமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை ஊராட்சிஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கங்கையம்மன்நகர், கலைக்கூத்து நகர், மாரியம்மன் நகர், மேட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிப்காட் ரயில்வேகேட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையில் இருந்து செல்லும் ரோடு கங்கையம்மன் நகர், கலைக்கூத்து நகர், மாரியம்மன்நகர், மேட்டாங்காடு உள்ளிட்ட பகுதி மக்களுக்காக பத்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.  குடியிருப்பின் கிழக்குபகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு இந்த வழியாகத்தான் செல்லவேண்டும். மேலும் சிவகங்கை செல்வதற்கும், சிப்காட், குலையனூர், கொன்னக்குளம், பறையங்கும், சூரக்குளம், மணக்குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் தாயமங்கலம், இளையான்குடி, செல்வதற்கும் இந்த தார்ச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய போக்குவரத்திற்கு ஆதாரமாக திகழும் இந்த ரோடு பத்து ஆண்டுகளுக்கு முன் அரைகுறையாக போடப்பட்டது. அதன்பின் பராமரிப்பின்றி போனதால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே, விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த முருகன் கூறுகையில்,`` மானாமதுரை ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட எங்கள் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த தார்ச்சாலை வழியாகத்தான் வாகனங்களில் சிவகங்கை, இளையான்குடி, தாயமங்கலம், மானாமதுரை டவுனுக்கும், சிப்காட்டிற்கும் சென்று வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த ரோடு பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த ரோடு வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால், பள்ளி மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து, பல முறை பிடிஓ அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த சாலையை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: