ஜெயங்கொண்டம், ஏப். 9: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்யக்கூடிய எள், கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு விவசாய உற்பத்தி பொருட்களை ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மூர்த்தி என்ற வியாபாரி விவசாய உற்பத்தி பொருட்களை வாங்குவதற்காக ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தில் விலைக்கான ரசீதை கொடுத்த போது பொறுப்பு அலுவலராக உள்ளவர் மூர்த்தியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் விவசாய உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்யாமல் வெளியேறினர். இதனால் நேற்று விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடலை, எள் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் அடிக்கடி வியாபாரிகளுக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்களுக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவதும் அதனால் விவசாய உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள் இருப்பதும் தொடர் கதையாகி விட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தொடர்ந்து விவசாய விளை பொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
