திருப்பரங்குன்றம் அருகே நவீன கால்நடை மருத்துவமனை சமுதாயக்கூடம் அமைக்கப்படும் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி உறுதி

திருப்பரங்குன்றம், ஏப். 10: திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பபாண்டி, தனது தேர்தல் பிரசாரத்தின் போது விளாச்சேரியில் நவீன சமுதாயக்கூடம், நிரந்தர கால்நடை மருத்துவமனை கட்டித்தரப்படும் என்றார். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி நேற்று திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி, சீனிவாசா காலனி, கீழக்குயில்குடி, வடிவேல்கரை, நாகமலை புதுக்கோட்டை, ஆலம்பட்டி, பல்கலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பேசியதாவது: திராவிட மாடல் திமுக ஆட்சியில், பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருக்கும் அதிமுகவை சேர்ந்தவர் தொகுதி மக்களை சந்திப்பதோ, குறைகளை கேட்டு தீர்வு காண்பதோ இல்லை என, பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஆனால் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி ெபறச்செய்யுங்கள், உங்களை தேடி வந்து தேவைகளை கேட்டு, அதற்கான திட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மேலும் விளாச்சேரியில் சமுதாயக்கூடம், நவீன கால்நடை மருத்துவமனை போன்றவை அமைக்கப்படும். திருப்பரங்குன்றத்தில் சூரியன் உதயமானவுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

உங்கள் தொகுதி ஆளுங்கட்சி தொகுதியாக இருக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்குப்பதிவு செய்யுங்கள். இவ்வாறு பேசினார். இந்த பிரசாரத்தின் போது திமுக மாவட்ட துணை செயலாளர் ஏர்போர்ட் பாண்டி திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, நிர்வாகிகள் மாரிமுத்து, இதயத்துல்லா, ஜான்சன், மகளிரணி பிரமிளா, சாந்திபாண்டி, வள்ளிமயில், சாந்தி ஜான்சன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Related Stories: