புதுடெல்லி: கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்புக்கு எதிராக கேரளா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு சீராய்வு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மனுக்கள் அனைத்தையும் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுக்கள் மீதான வழக்குகளை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட சீராய்வு மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அசானுதீன் அமனுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ், பிரசன்னா பி வராலே, ஆர்.மகாதேவன் மற்றும் ஜாய்மால்யா பாக்ஷி ஆகிய ஒன்பது பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ இந்து மதத்தை, தத்துவ ரீதியாக ஒரு வாழ்க்கை முறையாக விவரிக்கலாம். ஆனால் அரசியலமைப்பு நோக்கங்களுக்காக அது ஒரு மதமாகும். மேலும் அதில் பல உட்பிரிவுகளையும் கொண்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் அதற்கான தனி அடையாளங்கள் உள்ளன. இதே நிலைதான் இஸ்லாமிற்கும் பொருந்தும். இஸ்லாம் மதத்துக்குள்ளும் பன்மைத்துவம் உள்ளது. அதற்குள் பல பிரிவுகள் உள்ளன.
மதத்தை பகுத்தறிவு அல்லது அறிவியல் அடிப்படையை கொண்டு ஆராய்ந்து பார்க்க முடியாது. அதாவது அறிவியலால் விளக்க முடியாத, அனைத்தையும் உள்ளடக்கிய, சர்வவல்லமை படைத்த ஒரு சக்தியின் மீது நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் அடிப்படையில் மட்டுமே, ஒரு விஷயம் அத்தியாவசியமான மத சடங்கா? ,இல்லையா ? என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. அது நீதித்துறை ஆய்வின் பொருத்தமான நடவடிக்கையாக இருக்காது.
மேலும் மதப் பிரிவுகள் தங்களது விவகாரங்களை நிர்வகித்துக் கொள்வதற்கான கூட்டு அடிப்படை உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 26ஆனது உறுதி செய்கிறது. அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயம், நம்பிக்கை அடிப்படையிலான விஷயங்கள் தொடர வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா, ஆனால் இந்து கோயில்கள் என்பது அனைத்து இந்துக்களுக்கும் உரியது. அனைத்து இந்துக்களுக்காகவும் திறந்திருக்கும் என்றார்.
இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட ஒன்றிய அரசு வழக்கறிஞர், ‘‘ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது ஒரு மதப்பிரிவு சார்ந்த கோயில். எனவே சட்டப்பிரிவு 26 பொருந்தும் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘‘உங்களின் இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுக்கிறது. ஏனெனில் இந்து சமயத்தின் ஒரு பிரிவினரின் கீழ் வருது என்று கூறினாலும், சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது ஒரு இந்து கோயில் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
