சுங்கசாவடிகளில் 10ம் தேதி முதல் ரொக்க பரிவர்த்தனை ரத்து: யுபிஐ மூலம் 1.25 மடங்கு கூடுதல் கட்டணம் வசூல்

சுங்கசாவடிகளில் 10ம் தேதி முதல் ரொக்க பரிவர்த்தனை ரத்து: யுபிஐ மூலம் 1.25 மடங்கு கூடுதல் கட்டணம் வசூல்

புதுடெல்லி: 10ம் தேதி முதல் சுங்க சாவடிகளில் ரொக்க பரிவரத்தனை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.யுபிஐ மூலம் 1.25 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுங்க சாவடிகளில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை குறைக்கும் வகையில் புதிய முறை அமலுக்கு வர உள்ளது.

அதன்படி, ஏப்ரல் 10ம் தேதி(வெள்ளிக்கிழமை)முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் செலுத்தும் முறை நிறுத்தப்பட உள்ளது. புதிய அமைப்பின் கீழ், வாகன ஓட்டிகள்,பாஸ்டேக் அல்லது யுபிஐ மூலமாக மட்டுமே இனி கட்டணம் செலுத்த முடியும்.

இது தொடர்பாக ஒன்றிய சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
10ம் தேதி முதல் சுங்க சாவடி பரிவர்த்தனைகள் அனைத்தும் பாஸ்டேக், டிஜிட்டல் முறையில் மட்டுமே நடைபெறும். வாகனங்களில் பாஸ்டேக் வசதி இல்லையெனில் யுபிஐ பயன்படுத்தி சுங்க கட்டணம் செலுத்தலாம். அதற்கு வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். அரசு அலுவலக வேலைகளுக்காக பயணம் செய்யும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட வாகனம் பாஸ்டேக், யுபிஐ என இரண்டு வழிகளிலும் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உங்களுடைய செல்போன் எண்ணுக்கு கட்டணம் குறித்த தகவல் அனுப்பி வைக்கப்படும்.

மூன்று நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை செலுத்தி விட வேண்டும் இல்லை என்றால் வழக்கமான கட்டணத்தை போல இரு மடங்கு தொகையை செலுத்த வேண்டியிருக்கும். அதாவது அபராதம் சேர்த்து செலுத்த வேண்டியது இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் பாஸ்டேக் கணக்கு மற்றும் அதில் பணம் இருப்பதை உறுதி செய்து பயணத்தை தொடங்குங்கள், இல்லை என்றால் யுபிஐ கணக்கிலாவது பணம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: