நாளை தேர்தல் கேரளா, அசாம், புதுச்சேரியில் பிரசாரம் ஓய்ந்தது

திருவனந்தபுரம்: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15ம் தேதி மாலையில் வெளியானது. இதில் கேரளா, அசாம், புதுச்சேரியில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரசாரத்திற்கு மிகக் குறைந்த நாட்களே இருந்ததால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் முதல் நாளில் இருந்தே சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கினர். பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேசிய தலைவர்கள் பல கட்டங்களாக கேரளத்தில் முகாமிட்டு தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் 3 மாநிலங்களிலும் பிரசாரம் ஓய்ந்தது. இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட தேர்தலுக்கு தேவையான உபகரணங்கள் விநியோகம் செய்யப்படும். இவற்றுடன் தேர்தல் அதிகாரிகள் இரவுக்குள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று விடுவார்கள். நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலை முன்னிட்டு நாளை 3 மாநிலங்களிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் மத்திய போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 789 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 366 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் மொத்தம் 985 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 3மாநிலத்திலும் நாளை பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்படும்.

* ஏப்ரல் 9 காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளுக்குத் தடை
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதோ அல்லது வெளியிடுவதோ கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தக் கால இடைவெளியில் கருத்துக்கணிப்புகளை நடத்துவதோ அல்லது ஒளிபரப்புவதோ, ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951’-இன் பிரிவு 126A-ஐ மீறும் செயலாகும். இது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Related Stories: