புதுச்சேரி யூனியன் பிரதேசமானது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிதி சிக்கல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. இது, புதுச்சேரி வளர்ச்சியின் வேகத்தை, குறிப்பிடத்தக்க வகையில் தொடர்ந்து மெதுவாக்குகிறது. மத்திய நிதிக் கமிஷனில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிலுவையில் உள்ளது. மேலும், மாநில அந்தஸ்து வேண்டும், நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும் என்று கோரி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜவுடன் கூட்டணி வைக்க பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு ரங்கசாமி அழுத்தம் கொடுத்தார்.
ஆனால் டெல்லி பாஜ தலைமை மிரட்டி என்.ஆர்.காங்கிரசை பாஜவுடன் கூட்டணி வைக்க வழிக்கு கொண்டு வந்தது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி பங்கேற்ற பிரசாரத்தில் மட்டும் ரங்கசாமி கலந்து கொண்டதோடு விட்டுவிட்டார். மற்றபடி கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரம் செய்யவில்லை. மேலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை மட்டும் ஆதரித்து ரங்கசாமி பிரசாரம் செய்தார்.
மற்றபடி கூட்டணி கட்சியான பாஜ, அதிமுக, லஜக போட்டியிடும் தொகுதியில் அவர்களது கட்சி வேட்பாளரை ஆதரித்து ரங்கசாமி பிரசாரம் செய்யவில்லை. பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று கூட்டணி கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்வார் என எதிர்பார்த்த நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. இதனால் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் என்.ஆர்.காங்கிரஸ், கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றால் ரங்கசாமி ஆட்டம் தனி ஆட்டமாக இருக்கும், என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
