சென்னிமலையில் ஆட்டோ காஸ் பங்குகள் தொடர்ந்து மூடல்

சென்னிமலை,ஏப்.8: சென்னிமலையில் ஆட்டோ காஸ் பங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை காக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் போர் தொடுத்து வருவதால் இந்தியாவுக்கு எரிவாயு இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது.இதனால், கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் வணிக எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் உணவு பண்டங்களின் விலை உயர்ந்துள்ளதால் ஓட்டல்களும், பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளது. அதேபோல் வாகனங்களுக்கு விநியோகம் செய்யப்படும் ஆட்டோ காஸ் பங்குகளுக்கு காஸ் சப்ளை நிறுத்தப்பட்டதால் ஆட்டோ காஸ் பங்குகளும் மூடப்பட்டுள்ளது.

சென்னிமலையில் வெள்ளோடு ரோடு, ஈங்கூர் ரோடு என 2 இடங்களில் வாகனங்களுக்கான ஆட்டோ காஸ் பங்கு உள்ளது. நாடு முழுவதும் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்ட நாளில் இருந்து இந்த 2 பங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கூறுகையில், ‘‘தேர்தலுக்காக எங்கள் ஆட்டோக்களை வாடகைக்கு ஓட்டினால் எங்களுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும். ஆனால், தொடர்ந்து ஆட்டோ காஸ் பங்குகள் மூடியே இருப்பதால் ஆட்டோக்களை இயக்க முடியவில்லை. இதனால், பொதுமக்களும் பாதிக்கின்றனர். அதேபோல் பலர் கார்களுக்கு காஸ் நிரப்ப முடியாமல் கார்களையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் நாங்கள் மட்டுமல்ல. அனைத்து ஊர்களிலும் எங்களை போன்ற வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கும். எனவே, ஒன்றிய அரசு தலையிட்டு வாகனங்களுக்கு எளிதாக காஸ் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: