வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் விவசாயிகளுக்கு ₹50 கோடி இழப்பு கலெக்டரிடம் கோரிக்கை மனு

நாமக்கல், பிப். 19: வேர் அழுகல் நோயால், வெங்காய விவசாயிகளுக்கு ₹50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால், இடைக்கால நிவாரணம் அளிக்க கோரி, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்ட காவிரி நீரேற்று பாசனதாரர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியன், உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் விபரம்: மோகனூர், சேந்தமங்கலம் தாலுகாவில் விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிர் செய்து இருந்தனர். வேர் அழுகல் நோய், இலைக்கருகல் நோய் ஏற்பட்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெங்காய பயிர் சேதம் அடைந்து சுமார் ₹5 கோடிக்கு  மேல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ₹50 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் இதர சில பகுதிகளிலும் இதுபோன்று வெங்காய பயிரில் நோய் தாக்குதல் உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய, மாநில வல்லுனர்கள் குழு அமைத்து  ஆய்வு செய்து உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். வளையப்பட்டியில் வெங்காய ஆராய்ச்சி மையம் அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுவின் மீது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: