ஈரான் போரால் பொருளாதார நெருக்கடி மக்களை திசைதிருப்பவே தொகுதிகள் அதிகரிப்பு முயற்சி: பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்,எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர், மக்களை ஏமாற்றும் நோக்கில் தவறான அறிக்கைகளை வெளியிடும் தனது வழக்கமான தந்திரங்களைக் கையாள்கிறார். மக்களவையின் பலம் 50% அதிகரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்தின் இடங்களின் எண்ணிக்கையும் 50% அதிகரிக்கப்பட்டாலும், தென்னிந்திய மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என மோடி கூறுகிறார். பிரதமரின் இந்த அறிக்கை வழக்கமான பாணியிலான மக்களை ஏமாற்றுவதாகும்.

உதாரணமாக, மக்களவையில் உபிக்கும் கேரளாவிற்கும் இடையிலான இடங்களின் வித்தியாசம் தற்போது 60 ஆக உள்ளது. மோடியின் முன்மொழிவு அதை 90 ஆக அதிகரிக்கும். ஏற்கனவே அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய மாநிலங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், அவற்றுக்கு அதிக நன்மை பயக்கும் ஒரு திட்டத்தை மோடி வலுக்கட்டாயமாகத் திணிக்கிறார்.

தென்னிந்தியா மட்டுமல்ல, பஞ்சாப், அரியானா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்றவற்றின் செல்வாக்கும் குறையும். நாடு கடுமையான பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அர்த்தமுள்ள கலந்தாலோசனைகள், பரவலான பொது விவாதம் இன்றி, மக்களவை, சட்டமன்றங்களின் பலத்தை அதிகரிப்பதை மட்டுமே பிரதமர் பேசுகிறார். இது மக்களை திசைதிருப்பும் ஒரு பெரும் கவனச்சிதறல் ஆயுதம் என்பதை தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மூத்த காங்கிரஸ் எம்பி மனிஷ் திவாரி, உபியில் 80 இடங்கள் உள்ள நிலையில், பஞ்சாப்,அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்ந்து மக்களவையில் வெறும் 40 இடங்கள் மட்டுமே உள்ளன. மறுவரையறைக்குப் பிறகு இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கும். தெளிவற்ற நிலையில் பிரதமர்,முன்வைக்கும் திட்டங்கள், கூட்டாட்சி சமநிலையை மேலும் சீர்குலைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: