தியாகராய நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் பரப்புரை; பள்ளி மாணவர்களை அழைத்துவந்து கூட்டத்தைக் காட்ட முயற்சி

 

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போட்டியிடவுள்ளார். சில நாள்களுக்கு முன்னர் ஆனந்த் தனது பரப்புரையைத் தொடங்கினாலும், அவ்வப்போது விஜய் பரப்புரைக்குச் செல்லும்போது தனது தொகுதியில் பரப்புரைக்கு விடுமுறை விட்டுவிட்டு விஜயுடன் சென்றுவிடுகிறார். நேற்று மீண்டும் தனது தொகுதியில் ஒருவழியாகத் தனது பரப்புரையை வடபழனி பகுதியில் தொடங்கியுள்ளார். புஸ்ஸி ஆனந்த்தின் பேச்சு எவ்வளவு நகைச்சுவையாக இருக்குமோ அதே அளவு அவரின் பரப்புரையின்போது நடக்கும் நிகழ்வுகளும் அதற்குக் குறைவில்லாமல் உள்ளது.
பரப்புரையில் ஈடுபடும்போது ஆனந்த்திற்கும் உடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கும் எந்தப் பக்கம் செல்வது எனத் தெரியாமல் ஆளுக்கு ஒருபக்கம் செல்லும் நிலை உள்ளது. மேள தாளங்களுடம் முன்னால் செல்பவர்கள் வலது பக்கம் சென்றால் ஆனந்த் செல்லும் வாகனம் இடது பக்கம் சென்று விடுகிறது.

மீண்டும் அவர்கள் எல்லாம் ஓடிவந்து இணைந்துகொள்கிறார்கள். எந்தவிதமான திட்டமிடுதலும் இல்லாமல் பரப்புரைக்குச் செல்லும் இவர்களைப் பார்த்து அங்குள்ள பொதுமக்கள் சிரித்துவிட்டுக் கடந்து செல்கிறார்கள். இதில் உச்சகட்டமாக ஒரு இடத்தில் வலது பக்கம் சென்றால் ஆயிரம் விளக்கு தொகுதி, இடது பக்கம் தியாகராய நகர் தொகுதி. சற்று நேரம் எந்தப் பக்கம் செல்வது என்பது தெரியாமல் நிர்வாகிகள் அவர்களுக்குள் பேசிக்கொள்ள, விவரம் தெரிந்த ஒருவரின் உதவியுடன் இடதுபக்கம் சென்று தியாகராய நகர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டனர்.

மேலும், தொடர்ச்சியாகத் தவெகவினர் தங்களுக்கு இளைஞர்கள் ஆதரவு உள்ளது. நாங்கள் ஆட்களைக் கூட்டிவரவேண்டிய தேவை இல்லை; அவர்களாகவே வருகிறார்கள் எனச் சொல்லி வருகிறார்கள். ஆனால், களத்தில் உண்மை வேறாக உள்ளது. நேற்று புஸ்ஸி ஆனந்த் பரப்புரைக்குக் கூட்டம் சேர்த்தவேண்டி அங்குள்ள நிர்வாகிகள் பள்ளி மாணவர்களை அழைத்து வந்தனர். அங்கு இருந்தவர்களில் ஏராளமானவர்கள் பள்ளி மாணவர்கள் என்பதைப் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் 10ம் வகுப்பு 12ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள். அங்கு இருந்த வியபாரிகள் எல்லாம் பள்ளிக்கூடத்துப் பசங்க எனச் சொல்லியதையும் கேட்க முடிந்தது.

 

Related Stories: