சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 3ம் கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் தொடங்குகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து திருச்சி, ஈரோடு,கோவை மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து 2ம் கட்ட பிரசாரத்தை கடந்த 3ம் தேதி திருநெல்வேலியில் தொடங்கிய அவர் தொடர்ந்து நாகர்கோவில், சங்கரன்கோவில், விருதுநகரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். நேற்று மாலை திருமங்கலத்தில் 2ம் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
இதனை தொடர்ந்து 3ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு புதுச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு திட்டக்குடி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அன்று மாலை 5 மணிக்கு நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நாகப்பட்டினத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். வருகிற 8ம் தேதி (புதன்கிழமை) மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், செஞ்சி, மயிலம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
வருகிற 9ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அன்று மாலை 5 மணிக்கு மறைமலைநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், தாம்பரம், பல்லாவரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
