சென்னை,: சென்னை புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் காட்டூர் நல்ல முத்து தெரு பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ் (70), இவர் அதிமுக கட்சியில் எழும்பூர் வடக்கு பகுதி செயலாளராக உள்ளார். இவர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் தனது அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் உடனடியாக துரைராஜை கீழே இறக்கி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு துரைராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தற்கொலைக்கு முயன்ற துரைராஜ் அதிமுகவில் எழும்பூர் வடக்கு பகுதி செயலாளராக உள்ளார். தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் சூளை அங்காளம்மன் கோயில் முன்பு அதிமுகவின் எழும்பூர் தொகுதி வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமியை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் போதிய ஆட்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு வடசென்னை மேற்கு தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள துரைராஜை அனைவரின் முன்னிலையில் வயதானவர் என்று பார்க்காமல் அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரவு முழுவதும் மன உளைச்சலில் இருந்த துரைராஜ் நேற்று அதிகாலை 4 மணி அளவில் தற்கொலைக்கு முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டம் வரவில்லை என்பதற்காக சொந்த கட்சி பகுதி செயலாளரை பொதுமக்கள் மத்தியில் அநாகரிகமாக பேசியதால் 70 வயதுடைய பகுதி செயலாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் எழும்பூர் பகுதி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
