சென்னை,: விசிக தொண்டர்கள் உதிரித்தனமாக சில கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டுமென அக்கட்சி பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்துக் கட்சிகள் சார்பிலும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் விசிக சார்பில் அக்கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அக்கட்சி தொண்டர்கள் இடையே அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக வேட்பாளர்கள் தேர்வில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவாகச் சிலரும் எதிராகச் சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவார் என அறிவித்ததால், அந்தத் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவைஉறுப்பினரும் அக்கட்சி பொதுச் செயலாளருமான சிந்தனை செல்வன் செய்யூர் தொகுதிக்கு மாற்றப்பட்டார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடவில்லை என அறிவித்து, ஜோதிமணி என்ற வேறு வேட்பாளரைத் திருமாவளவன் அறிவித்தார். இதனையடுத்து நிலைப்பாடு சரியாக இல்லை எனவும், சிந்தனை செல்வன் ஆதரவாகவும், வேறு வேட்பாளரை மாற்ற வேண்டும் என்றும் விசிக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், “தலைவர் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன்” என சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், ‘‘நெருக்கடியான நேரத்தில் தலைமையை உறுதியாகப் பற்றிக்கொள்வதுதான் உண்மையான தோழமைக்கு அடையாளம். நான் தலைவர் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன். என் மீது அன்பு கொண்டதாகச் சொல்லிக் கொள்ளும் தோழர்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் புரிதலின்றி உதிரித்தனமாகச் சில கருத்துக்களைப் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டுமென நான் வேதனையோடு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். எழுச்சித் தமிழர் தலைவர்தான் நம் அடையாளம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
