மேலூர் திருவாதவூர் கண்மாயில் களைகட்டிய சமத்துவ மீன்பிடி திருவிழா: பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

மேலூர், ஏப். 5: மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பெரிய கண்மாய் என்று அழைக்கக்கூடிய சோழப்பேரேரி கண்மாயில் சமத்துவ மீன்பிடி திருவிழா பாரம்பரிய முறைப்படி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி திருவாதவூர், மேலூர், மாணிக்கம்பட்டி, கலுங்கம்பட்டி, தமராக்கி, ஆமூர், சருகுவலையபட்டி, நத்தம், மணப்பாறை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாகனங்களில் நேற்று முன்தினம் இரவே கண்மாய் கரையில் குவிய ஆரம்பித்தனர்.

தொடர்ந்து கிராம பெரியவர்கள் கோயிலில் மேளதாளத்துடன் வாணவேடிக்கை முழங்க வழிபாடு செய்து விட்டு வந்து வெள்ளை வீசி மீன்களை பிடிக்க அனுமதி அளித்தனர். இதை தொடர்ந்து ஒரு சேர கண்மாய்குள் இறங்கிய பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான கச்சா, ஊத்தா, கூடை ஆகியவற்றை கொண்டு போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, கெளுத்தி, ரோகு, ஜிலேபி, அயிரை உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் 2 கிலோ முதல் 5 கிலோ வரை மீன்கள் சிக்கின. இதுபோன்ற சமத்துவ மீன் பிடி திருவிழா நடத்தப்படுவதன் மூலம் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மீன்பிடி திருவிழாவில் மக்கள் தங்களுக்குள் ஏற்படும் வேற்றுமையை மறந்து சமத்துவமாக மீன்களை பிடித்து மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு பிடித்த மீன்களை யாருக்கும் விற்காமல் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

Related Stories: