ஓசூரில் முள்ளங்கி விலை உயர்வு

ஓசூர், ஏப்.5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். தற்போது முள்ளங்கியை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் முள்ளங்கி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து கிலோ ரூ.8க்கு விற்பனையானது. மேலும் விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.3 முதல் ரூ.4 வரை அடிமட்ட விலைக்கே வாங்கிச் சென்றனர். இதனால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்காமல், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

விலை குறைவால் விவசாயிகள் மாற்றுப்பயிர்களான கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்ததால், முள்ளங்கி சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது. விளைச்சல் குறைந்திருப்பதால், விவசாயிகள் அவற்றை உள்ளூர் சந்தைக்கு அனுப்பாமல், அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கும், கார்ப்பரேட் கடைகளுக்கும் அதிகளவு அனுப்புகின்றனர். இதனால் முள்ளங்கியின் விலை உள்ளூர் சந்தையில் அதிகரித்துள்ளது. உழவர் சந்தையில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. முள்ளங்கி விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: