கோடை வெயில் தாக்கத்தால் உதிர்ந்து விழும் மாம்பிஞ்சுகள்

போச்சம்பள்ளி, மார்ச் 28: கோடை வெயிலின் தாக்கத்தால், போச்சம்பள்ளி பகுதியில் மாமரங்களில் இருந்து மாம்பிஞ்சுகள் வெதும்பி உதிர்ந்து விழுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 36 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டு கோடைக்கு முன்பே கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் மாந்தோட்டங்களில் உள்ள மாமரங்களில் தற்போது காய்பிடிப்பு தொடங்கியுள்ளது. கடும் வெயில் காரணமாக, மாமரங்களில் இருந்து மாம்பிஞ்சுகள் உதிர்ந்து கீழே விழுகிறது. இதனால் மா விளைச்சல் குறையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அனைத்து பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு கூறுகையில், `ஆண்டுதோறும் மா விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைவு அல்லது மழையால் விளைச்சல் சரிவு போன்ற காரணங்களால், மா விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். நடப்பாண்டு பூக்கள் நன்றாக பூத்து, மாம்பிஞ்சுகள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், கடும் வெயிலால் மாந்தோட்டங்கள் காய்ந்து வரும் நிலையில், ஒரு டிராக்டர் தண்ணீரை ரூ.500 முதல் ரூ.700 வரை விலை கொடுத்து வாங்கி ஊற்றி, மாமரங்களை காப்பாற்றி வருகின்றனர். தற்போது, வெயிலின் தாக்கம் காரணமாக, மாம்பிஞ்சுகள் உதிர்ந்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்,’ என்றார்.

Related Stories: