மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: கட்சியை விட்டு எத்தனை பேர் வெளியே சென்றாலும் அதிமுக நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும். அதிமுக கூட்டணிக்கு யாரும் வரவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் பாஜ. டிடிவி, அன்புமணி என பல்வேறு கட்சியினர் கூட்டணிக்கு வந்து விட்டனர். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு 2ம் இடம் தான். அதிமுக தேர்தல் அறிக்கைக்கே முதலிடம்.
திருமணம் நடக்கும்போது சண்டை வராமல் இருந்தால் தான் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அது போல கூட்டணிக்குள் சண்டை கிடையாது. பாமக, மதிமுகவிற்கு தேர்தலில் அங்கீகாரம் வாங்கித்தந்தவர் ஜெயலலிதா. இவ்வாறு கூறினார். பின்னர், செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள், ‘‘நடிகர் விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. அது எம்ஜிஆருடன் முடிந்து விட்டது என்றீர்கள்.
ஆனால், மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர், நடிகர் சுந்தர்.சி தேர்தலில் போட்டியிடுகிறாரே?’ என்றனர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ‘‘சுந்தர்.சிக்கு பேஸ் வேல்யூ உள்ளது. அவர் நடிகர், இயக்குனர், குஷ்புவின் கணவர் என்பதை விட அவர் ஒரு வேட்பாளர். நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டியது தமிழ்நாடு. ஆனால், தேர்தலில் குஷ்பு தோல்வி அடைந்து விட்டார். தவெக தலைவர் விஜய்க்கு எம்ஜிஆர் யாரென்பது தேர்தலுக்கு பின்னர் தெரிய வரும். எம்ஜிஆர்னா யாருடா? எம்ஜிஆர் எம்ஜிஆர்தான்’’ என்றார்.
* ஓடிப்போனவர்களை பத்தி ஏன் கேட்குறீங்க…?
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில் அதிமுக மாஜி அமைச்சர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நான்கு இடங்களில் போட்டியிட்டு இருக்கிறார். விஜய் போட்டியிடுவது அதிசயமாக பேசி வருவது வேடிக்கையாக இருக்கிறது. அம்மா என்றால் சும்மாவா அம்மாவுடைய தலைமை வேற யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள். விமர்சனம் செய்வதற்கு தகுதியே இல்லாத ஆள் செங்கோட்டையன். கட்சியை விட்டு ஓடிப்போன ஆட்களைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள், இதற்கு தலைமை பதில் சொல்லும்’ என்றார்.
